
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 6 மணி முதலே தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் வெளியிடப்பட்டு வருகின்றன. காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரம் தெளிவாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறுதி அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை முதல் நள்ளிரவு வரை வெளியாகக்கூடும்.
சென்னையில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக நடைபெறுவதால், ஆரம்ப நிலவரங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.