சென்னை:
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவனம் ஈர்த்துள்ளது. மொத்தம் 8 தொகுதிகளில் களமிறங்கியிருந்த அந்தக் கட்சி, தற்போதைய நிலவரப்படி 2 தொகுதிகளில் மட்டும் முன்னிலையில் இருந்தது. அதிலும் அந்த இரண்டு தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்கள் களம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. காலை 11 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 101 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து அதிமுக 78 தொகுதிகளிலும், திமுக 54 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பல இடங்களில் எதிர்பாராத நிலவரம் உருவாகி, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 8 தொகுதிகளில், இரண்டு தொகுதிகளில் மட்டும் முன்னிலை கிடைத்தது. அரக்கோணம் தொகுதியில் எழில் கரோலின் முன்னிலையில் இருந்தார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றிருந்தார். இந்த இரண்டு இடங்களிலும் பெண் வேட்பாளர்கள் முன்னிலை பெற்றிருப்பது, விசிக தரப்புக்கு ஆறுதலாக அமைந்தது. மற்ற 6 தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்தனர்.
ஆனால், தேர்தல் களநிலவரம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது. காலை 11 மணியளவில் 2 தொகுதிகளில் முன்னிலையில் இருந்த விசிக, சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக நிலை மாறியது. குறிப்பாக அரக்கோணம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் காந்திராஜன் முதலிடத்திற்கு வந்தார். இதனால் விசிக வேட்பாளர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. இதுவரை மூன்று சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டிருந்ததால், நிலவரம் மேலும் மாறும் வாய்ப்பும் இருந்தது.
விசிக தலைவர் திருமாவளவனுக்கு இந்த இரண்டு பெண் வேட்பாளர்களின் முன்னிலை சிறிய நிம்மதியை அளித்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கடும் போட்டி, மாற்றமடைந்த கூட்டணிச் சமன்பாடு, வாக்கு சிதறல் ஆகிய சூழலில், விசிக சில தொகுதிகளில் மட்டும் தக்க இடத்தைப் பிடித்திருப்பது கவனிக்கத்தக்கது. இறுதி முடிவுகள் வெளியாகும் வரை பரபரப்பு நீடிக்கும் நிலையில், இந்தத் தொகுதிகளின் நிலவரம் அரசியல் கணக்குகளை மாற்றக்கூடும்.