புதுடெல்லி, ஜனவரி 13: தமிழர்களின் பாரம்பரியத்தை உலகம் முழுவதும் பிரதிபலிக்கும் வகையில், பொங்கல் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கிறது. விவசாயிகளின் உழைப்பையும், வேளாண்மையின் மகத்துவத்தையும் போற்றும் பண்டிகையாக பொங்கல் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருகிறார். “ஒரே பாரதம் – உன்னத பாரதம்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கிய அரசியல் தலைவர்கள், சமூக பிரதிநிதிகள், கலைஞர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டும், எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, தமிழர்களுடன் இணைந்து கொண்டாடினார்.
விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள், பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினரும் நிகழ்வில் பங்கேற்றனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் மோடி தமிழில் “இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என உரையைத் தொடங்கியதும், அங்கு இருந்த அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பிரதமர் மோடி தனது உரையில், “தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையைப் போற்றுவதையும் வெளிப்படுத்தும் சிறப்பான பண்டிகை பொங்கல். வேளாண்மையை போற்றும் பண்டிகைதான் பொங்கல். பொங்கல் பண்டிகையை சர்வதேச திருவிழாவாகக் கொண்டாடுவது அளவில்லாத மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் மக்களுடன் பொங்கலைக் கொண்டாடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று கூறினார்.
மேலும் அவர், “தமிழ் கலாசாரத்தில் உழவர்களே வாழ்வின் ஆதாரம் என்று போற்றப்படுகிறார்கள். தமிழர் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையைப் போற்றுவதையும் பிரதிபலிக்கும் பண்டிகைதான் பொங்கல். இன்று பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறியுள்ளது. தமிழர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆழமான தொடர்பை வெளிப்படுத்தும் திருக்குறள் இருந்துள்ளது” என வலியுறுத்தினார்.
இந்த விழா, தமிழர்களின் பாரம்பரியத்தை தேசிய மட்டத்தில் மட்டுமல்லாது, உலகளாவிய அளவிலும் பரப்பும் நிகழ்வாக அமைந்தது. பிரதமர் மோடியின் பங்கேற்பு, தமிழர் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இருந்தது. பொங்கல் பண்டிகை, தமிழர்களின் வாழ்வியல், வேளாண்மை, சமூக ஒற்றுமை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதால், இந்த நிகழ்வு சிறப்புமிக்கதாக அமைந்தது.