மாஸ்கோ:

ரஷியா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தகவல் பரிமாற்ற கட்டுப்பாடுகளை கடுமைப்படுத்தும் நோக்கில் ரஷிய அரசு ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட வெளிநாட்டு சமூக வலைத்தள செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதனால், 10 கோடிக்கும் மேற்பட்ட ரஷிய பயனாளர்கள் திடீர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கியதிலிருந்து, நாட்டின் உள்நாட்டு தகவல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை அரசு மிகுந்த கண்காணிப்பில் வைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

போரின் போது, மக்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நிலைமை அதிகரித்தது. இதனால் அரசின் ரகசிய தகவல்கள் வெளியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மக்கள் செயல்பாடுகளை கண்காணிக்க ரஷிய அரசு தனது சொந்த சமூக வலைத்தள செயலியான ‘மேக்ஸ்’ (Max) எனும் புதிய செயலியை உருவாக்கியது.

இந்த செயலி, வாட்ஸ்அப்பிற்கான மாற்றாக அரசால் பரிந்துரைக்கப்பட்டதுடன், அனைத்து பொதுமக்களும் கட்டாயமாக அதை நிறுவுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம், அரசு நாட்டு மக்களின் தொடர்புகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களை நேரடியாக கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.

முன்னதாக, குறிப்பிட்ட சில பயனாளர்களின் தொலைதொடர்பு தகவல்களை ரஷிய அரசு கேட்டு ‘வாட்ஸ்அப்’ நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தது. ஆனால், பயனாளர்களின் தனியுரிமையை மீற முடியாது என்ற காரணத்தால் ‘வாட்ஸ்அப்’ அதை மறுத்தது. இதுவே இப்போது தடை விதிப்புக்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

அதன்படி, ரஷிய அரசு தற்போது ‘வாட்ஸ்அப்’, ‘டெலிகிராம்’ உள்ளிட்ட வெளிநாட்டு மெசேஜிங் செயலிகளை தடை செய்துள்ளது. இதனால், இந்த செயலிகளை பயன்படுத்தி வந்த கோடிக்கணக்கான பயனாளர்கள் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

ரஷிய அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் தனது அறிக்கையில், “ரஷியாவில் உள்ள எங்கள் பயனாளர்களின் தொடர்பு உரிமையை பறிக்கக்கூடிய இந்த முடிவு ஜனநாயகத்திற்கு எதிரானது. உலகின் எந்த மூலையிலும் தகவல் சுதந்திரத்தை காக்க நாங்கள் உறுதியாக நிற்கிறோம்,” என்று தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், ரஷியாவில் இணைய சுதந்திரம் குறைந்து வருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.