சென்னை,

சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவை கடந்த மாதம் 30ஆம் தேதி வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசுக் கல்லூரியில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதிக்கான மனுவை 2ஆம் தேதி திருச்சியில் சமர்ப்பித்தார். இரு மனுக்களிலும் பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களைத் தெரிவித்திருந்தார்.

திருச்சி மனுவில் தன் மீது இரு குற்றவழக்குகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தாலும், பெரம்பூர் மனுவில் எந்தவழக்கும் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், பெரம்பூரில் 52 வயது, திருச்சியில் 51 வயது என வயது விவரமும் வேறுபட்டிருந்தது. இக்குழப்பத்தால் மனு நிராகரிக்கப்படலாம் எனச் சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன.

இதற்கு முற்றுபுள்ளி வைக்க, 4ஆம் தேதி பெரம்பூர் தொகுதியில் திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் திருச்சி மனுவில் குறிப்பிட்ட இரு வழக்குகளும் சேர்க்கப்பட்டன. ஒன்று, கொளத்தூர் தொகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பிரசார வழக்கு. மற்றொன்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21இல் மதுரை மாநாட்டில் வாலிபர் ஒருவருக்கு ஏற்பட்ட உள்காய வழக்கு. வயதும் 51ஆக மாற்றப்பட்டது. த.வெ.க. வக்கீல் சூர்யபிரகாஷ் மற்றும் வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா இதைச் சமர்ப்பித்தனர்.

தவறுகள் உடனடியாகச் சரிசெய்யப்பட்டதால் மனு தள்ளுபடி ஆகாது எனக் கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி கிழக்கிலும் திருத்தம் செய்யப்பட்டது. இப்போது பெரம்பூர் வேட்புமனு ஏற்கப்பட்டதாகத் தேர்தல அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விஜய் மனு ஏற்கப்பட்டதற்கு திமுக மற்றும் சுயேட்ட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு ஏற்கப்பட்டது. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மனு, சாத்தூரில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மனு ஏற்கப்பட்டன. தர்மபுரியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி மனு, மயிலாப்பூரில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மனு ஏற்கப்பட்டுள்ளன