‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் 6 பேர் கைது: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முழு பதிப்பை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட்ட 6 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். படம் வெளியான அனைத்து இணையதளங்களையும் முடக்கிய போலீஸார், தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நடிப்பில், முன்னணி இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், விஜய்யின் திரைப் பயணத்தில் கடைசி படமாக இருப்பதால் உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டிய இந்தப் படம், தணிக்கை சிக்கல்களால் தாமதமானது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, கடந்த மாதம் மறு தணிக்கைக் குழு படத்தை ஆய்வு செய்தது. விரைவில் தணிக்கைச் சான்றிதழ் பெற்று திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நேரத்தில், படத்தின் முழு பதிப்பு சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்தது.

இந்தச் சம்பவம் படக்குழுவினர் மட்டுமின்றி, தமிழ் சினிமா துறையையே அதிர்ச்சி அடையச் செய்தது. படக்குழு மற்றும் தமிழ் சினிமா துறையினரிடமிருந்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

இணையதளங்கள் முடக்கம்: முதற்கட்டமாக, படம் வெளியான அனைத்து இணையதளங்களின் முகவரிகளையும் கண்டறிந்து, அவற்றை சைபர் க்ரைம் போலீஸார் முடக்கியுள்ளனர். இவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர்கள் யார்? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.

இந்த விவகாரத்தில் மாநில சைபர் க்ரைம் போலீஸார் 6 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் படத்தை சட்டவிரோதமாக பதிவிறக்கி, பல்வேறு இணையதளங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார், இவர்களின் பின்னணி, சர்வர்கள் மற்றும் பிற தொடர்புடைய நபர்களைத் தேடி விசாரிக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

இச் சம்பவம் தமிழ் சினிமாவில் புதிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பெரிய பட்ஜெட் படங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத வெளியீடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என திரைப்படத் துறை முன்னோடிகள் கோரியுள்ளனர்.