சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்த முறை ஐந்து முனைப் போட்டி சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாக்குகள் பல திசைகளில் சிதறும் நிலை காணப்படுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதால், சாத்தூர் நட்சத்திரத் தொகுதியாக மாறியுள்ளது. திமுக சார்பில் கடற்கரைராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆனந்தராஜா, தவெக சார்பில் அஜித், சசிகலா ஆதரவுடன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இசக்கிராஜா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளர் ரகுராமன் வெற்றி பெற்றிருந்தார். அதற்கு முன் பல முறை அதிமுக இந்தத் தொகுதியை பிடித்திருந்தது. இம்முறை அதிமுக நேரடியாக போட்டியிடாமல், பாஜக கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது.

நயினார் நாகேந்திரன் கடந்த முறை திருநெல்வேலி தொகுதியில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் “ஒரு முறை வெற்றியாளர் அடுத்த முறை தோல்வி” என்ற அரசியல் உணர்வு இருப்பதால், இம்முறை சாத்தூருக்கு மாறியுள்ளார். கூட்டணி வாக்குகளோடு, முக்குலத்தோர் உள்ளிட்ட சமுதாய வாக்குகளும் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த வாக்கு வங்கியை பிளக்கும் வகையில், தேவர் பாதுகாப்பு இயக்க வேட்பாளர் இசக்கிராஜா கிராமப்புறங்களில் உரிமையோடு, சென்டிமென்ட் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக தேவர், முக்குலத்தோர் வட்டாரங்களில் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர் கடற்கரைராஜ் முன்னாள் மாவட்ட கவுன்சில் தலைவராக இருப்பதால், உள்ளூர் அடிப்படை வலிமை பெற்றவர். சாத்தூர் தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சியின் ஆனந்தராஜா, தவெக வேட்பாளர் அஜித் ஆகியோர் இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள், பிரதானக் கட்சிகளால் விரக்தியடைந்த வாக்காளர்களை குறிவைத்து பரப்புரையில் இறங்கியுள்ளனர். சமூக ஊடகம், சிறிய கூட்டங்கள், வீடு தழுவிய சந்திப்பு போன்ற வழிகளில் இவர்கள் வாக்கு வங்கியை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

தொகுதியின் பழைய வாக்கு கணக்குகளும், சமூக சமன்பாட்டும் பார்க்கையில் திமுக, பாஜக இடையே நேரடி போட்டி என்றாலும், தவெக, நாம் தமிழர், தேவர் அமைப்பு வேட்பாளரும் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. இதனால் ஐந்து முனைப் போட்டி சூழல் சாத்தூரில் வாக்கு சிதறலை அதிகரித்து, இறுதி நிமிட அலை யாரை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது