சென்னை: தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகிப் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

தமிழக பாஜகவில் மிக முக்கியமான முகமாக இருந்தவர் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அவர், அந்தப் பதவியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தார். முதலில் ரஜினிகாந்த் தொடங்கும் அரசியல் கட்சியில் அண்ணாமலை இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி கட்சி தொடங்காததால் அண்ணாமலை தனது திட்டத்தை மாற்றினார்.
இரண்டாயிரத்து இருபது ஒன்றாம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல். முருகனுக்குப் பதிலாக அண்ணாமலை புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவரே மாநிலத் தலைவராகச் செயல்பட்டார். வேல் யாத்திரை தொடங்கி பாஜகவை மாநிலத்தில் வளர்க்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இரண்டாயிரத்து இருபது நான்கு மக்களவைத் தேர்தலிலும் அதிமுகவை விட்டுத் தனியாகக் கூட்டணி அமைப்பதில் அண்ணாமலைக்கு முக்கியப் பங்கு இருந்தது.
இந்தச் சூழலில் தான் இரண்டாயிரத்து இருபது ஐந்தாம் ஆண்டில் அவர் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் தலைமைப் பொறுப்பிற்குக் கொண்டு வரப்பட்டார். அதன் பிறகு அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதிமுகவுடன் பாஜக அமைத்த கூட்டணியில் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பொதுவெளியில் அவர் எதுவும் சொல்லாமலேயே இருந்தார்.
இதற்கிடையே தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்தது. பாஜக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து அண்ணாமலை புதிய கட்சியைத் தொடங்கலாம் என்று தகவல்கள் வெளியானது. கடந்த சில வாரங்களாகவே இந்தத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதேபோல் அண்ணாமலை தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு வரவில்லை. மவுனமாகவே இருந்தனர்.
இந்தச் சூழலில் தான் இன்று திடீரென அண்ணாமலை டெல்லிக்குப் பயணமாகப் புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரைச் செய்தியாளர்கள் சூழ்ந்தனர். புதிய கட்சி தொடங்குகிறீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, அண்ணாமலை அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. வெறுமனே “இப்போது பேசினால் சரியாக இருக்காது. எல்லாக் கேள்விகளுக்கும் இரண்டு நாட்களில் பதில் சொல்கிறேன்” என்று மட்டும் பதிலளித்தார்.
செய்தியாளர்கள் பல முறை கேட்ட போதிலும், அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை. மேலும் குறிப்பாக அவர் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் கட்சி தொடங்குவது கிட்டத்தட்ட உறுதி என்றே நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
மேலும் அண்ணாமலை வழக்கமாக பாஜக கொடி இருக்கும் காரிலேயே பயணிப்பார். ஆனால் இந்த முறை அவர் பயணித்த காரில் பாஜகவின் கொடி இல்லை என்றும் கூறப்படுகிறது. இது கூடுதல் சந்தேகங்களைத் தூண்டியுள்ளது. இரண்டு நாட்களில் அவர் தெளிவான பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.