புதுடெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், மேற்காசியப் பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பாக, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று மிக முக்கியமான உயர்மட்ட அவசர ஆலோசனையை நடத்தினார். உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை ஆகியவற்றை எதிர்கொண்டு, இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து இக்கூட்டத்தில் மிக விரிவாக விவாதிக்கப்பட்டது.

தற்போதைய சர்வதேசச் சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒருபுறமும், ஈரான் உள்ளிட்ட நாடுகள் மறுபுறமும் நின்றுகொண்டு தற்காலிகப் போர் நிறுத்த உடன்பாடுகளை அறிவித்திருந்தாலும், களத்தில் இருதரப்பினரும் மீண்டும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் மேற்காசியப் பிராந்தியத்தில் போர் நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து, உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாகச் சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையானது மளமளவென இமாலய அளவில் உயர்ந்து வருகிறது. எரிபொருட்களின் இந்த விலை உயர்வு காரணமாக, கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, பொதுமக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பெருமளவு அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், இந்தியப் உள்நாட்டுச் சந்தையில் பணவீக்கம் அதிகரிக்காமல் தடுக்கவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் இன்று கூடிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில், மேற்காசியப் போர் காரணமாக இந்தியப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய சாத்தியமான நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இந்தக் கூட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை எவ்விதப் பாதிப்பும் இன்றி மேலும் வலுப்படுத்துதல், சர்வதேசச் சந்தைகளில் நிலவும் திடீர் மாற்றங்களை எதிர்கொள்ளத் தேவையான நிதிக்கொள்கைகளை வகுத்தல் உள்ளிட்ட அடுத்தகட்ட முக்கிய உத்திகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வச் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: “இன்று புதுடெல்லியில் நடைபெற்ற பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் சிறப்புமிக்கக் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். பாரத தேசத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார மாற்றம், நிதிநிலை வளர்ச்சிக்கு முன்னுரிமைகள் அளிப்பது தொடர்பான பல்வேறு முக்கிய உத்திகள் குறித்து நிபுணர்களுடன் விரிவாக விவாதித்தேன். மேலும், நாட்டின் பொருளாதாரச் சீர்திருத்தப் பயணத்திற்கு உத்வேகம் அளிப்பது, இந்தியப் பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தை எளிமைப்படுத்துதல் மற்றும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடடின்றி உறுதி செய்வது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டோம்” எனப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். சர்வதேசப் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதார அரணைப் பலப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கை மிகவும் இன்றியமையாததாகப் பார்க்கப்படுகிறது.

http://பா.ஜ.க-வுக்கு அடுத்த அதிர்ச்சி! கோவையில் மாவட்ட, மண்டல் தலைவர்கள் உட்பட அண்ணாமலை ஆதரவாளர்கள் கூண்டோடு விலகல்! https://arasuparvai.com/next-thrill-for-paa-ja-ka/