காஷ்மீர் தீவிரவாதிகளை வீழ்த்திய கம்பம் வீரருக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
கம்பம்: இந்திய ராணுவத்தின் மிக உயரிய வீர தீர விருதுகளில் ஒன்றான ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்று, சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு, கிராம மக்கள் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (33). இவர் இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் என்ற உயரிய பொறுப்பில் காஷ்மீர் ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகிறார். நாட்டுப் பற்று மிக்க இவர், கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் தெற்கு குல்காம் பகுதியில் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த ஐந்து பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே மிக கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலின் போது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மீனாட்சி சுந்தரத்தின் வலது தோள்பட்டை மற்றும் வாய் பகுதியில் குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்திலும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் சற்றும் பின்வாங்காமல் துணிச்சலுடன் போரிட்ட அவர், அந்த ஐந்து தீவிரவாதிகளையும் சுட்டு வீழ்த்தி, தனது சக குழுவினரின் உயிரைக் காப்பாற்றி மகத்தான சாதனை படைத்தார்.
இவரது இந்த அசாத்தியமான வீர தீரச் செயலைப் பாராட்டி, இந்திய அரசு இவருக்கு நாட்டின் மிக உயரிய ராணுவ விருதான ‘கீர்த்தி சக்ரா’ வழங்க அறிவித்தது. 2026-ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு வீரர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டது. அந்த ஏழு பேரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் பெருமைக்குரிய இடத்தைப் பிடித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள், வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு இந்த உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்த விருதுகளைப் பெற்ற பிறகு, விடுமுறையில் தனது சொந்த ஊரான காமயகவுண்டன்பட்டிக்கு இன்று மீனாட்சி சுந்தரம் வருகை தந்தார். அவரை வரவேற்க கிராம மக்களும், முன்னாள் ராணுவத்தினரும், உறவினர்களும், மாணவர்களும் திரண்டு வந்திருந்தனர். கிராமத்தின் எல்லைக்கே சென்ற மக்கள், மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகளை வெடித்து, உற்சாக கோஷங்களுடன் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர்.
வீரர் மீனாட்சி சுந்தரத்தின் வீட்டிற்குச் சென்ற அவர், தனது குடும்பத்தினரைச் சந்தித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். பலரும் அவருக்கு பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்தும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ராணுவத்தினர் கூறுகையில், “இந்திய ராணுவத்தில் அசோக சக்ரா விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள மிக முக்கியமான விருது கீர்த்தி சக்ரா ஆகும். இத்தகைய உயரிய விருதினை எங்கள் மண்ணின் மைந்தர் பெற்று, தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது, எங்கள் கிராமத்திற்கே கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்” என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, காயத்தையும் பொருட்படுத்தாமல் தீவிரவாதிகளை வேட்டையாடிய மீனாட்சி சுந்தரத்தின் இந்த வீர வரலாறு, இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது.