2026-27 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்யும் நடைமுறை தொடங்கியுள்ள நிலையில், வரி செலுத்துவோர் மற்றும் சம்பளதாரர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. யார் ITR தாக்கல் செய்ய வேண்டும்? எந்த படிவத்தை பயன்படுத்த வேண்டும்? கடைசி தேதி எது? தாமதித்தால் என்ன அபராதம்? போன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் தெரிந்துகொள்வது அவசியமாகியுள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் என்பது வரி செலுத்துவோருக்கு மட்டுமல்ல, வருமானம் பெறும் அனைவருக்கும் முக்கியமான நிதி ஆவணமாகும். வங்கி கடன் பெறுதல், வெளிநாட்டு விசா விண்ணப்பம், வரி திருப்பிச் செலுத்துதல் (Refund) உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ITR தாக்கல் முக்கிய பங்காற்றுகிறது.

மாத ஊதியம் பெறும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழில் செய்பவர்கள், வர்த்தகர்கள், சுயதொழில் முனைவோர் என அனைவரும் தங்களது வருமான விவரங்களை அரசிடம் தெரிவிக்கும் வகையில் ITR தாக்கல் செய்யலாம். வரி செலுத்த வேண்டிய வருமானம் இல்லாவிட்டாலும், வருடாந்திர வருமானத்தை பதிவு செய்வது நிதி நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதன் மூலம் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்றவற்றை எளிதில் பெற முடியும். அதேபோல், அதிகமாக பிடித்தம் செய்யப்பட்ட TDS தொகையை திரும்பப் பெறவும் ITR அவசியமாகிறது. மேலும், பங்குச்சந்தை முதலீடுகள், சொத்து விற்பனை, வட்டி வருமானம் உள்ளிட்டவற்றின் கணக்குகளை சட்டப்பூர்வமாக பதிவு செய்யவும் இது உதவுகிறது.

வருமான வரிச் சட்டத்தின் கீழ் சில பிரிவினர் கட்டாயமாக ITR தாக்கல் செய்ய வேண்டும். ஒரே பரிமாற்றத்தில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வெளிநாட்டு பயண செலவுகளை மேற்கொண்டவர்கள், ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான மின்சார கட்டணம் செலுத்தியவர்கள், வங்கியின் நடப்பு கணக்கில் ரூ.1 கோடிக்கும் மேல் பரிமாற்றம் செய்தவர்கள் ஆகியோர் கட்டாயம் ITR தாக்கல் செய்ய வேண்டும்.

ITR தாக்கலுக்காக பல்வேறு படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ITR-1 மற்றும் ITR-2 படிவங்கள் சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் எளிய வருமான அமைப்பு கொண்டவர்களுக்கானது. சொத்து விற்பனை லாபம், வட்டி வருமானம், முதலீட்டு ஆதாயம் பெறுவோரும் இந்த படிவங்களை பயன்படுத்தலாம்.

ITR-3 மற்றும் ITR-4 படிவங்கள் தொழில் மற்றும் வர்த்தக வருமானம் பெறுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுயதொழில் செய்பவர்கள், வணிகர்கள், பார்ட்னர்ஷிப் நிறுவன பங்குதாரர்கள் மற்றும் HUF குடும்பத் தலைவர்கள் இந்த படிவங்களை பயன்படுத்தலாம். குறிப்பாக ITR-4 (Sugam) படிவத்தில் இந்த ஆண்டு முதல் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் கூடுதல் முதலீட்டு விவரங்களையும் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும்.

ITR தாக்கலுக்கான கடைசி தேதிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. ITR-1 மற்றும் ITR-2 தாக்கல் செய்பவர்களுக்கு ஜூலை 31 கடைசி நாளாகும். ITR-3 மற்றும் ITR-4 தாக்கல் செய்யும் தொழில் மற்றும் வர்த்தக பிரிவினருக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பரிமாற்றங்கள் மற்றும் Transfer Pricing உட்பட்ட நிறுவனங்களுக்கு நவம்பர் 30 வரை கால அவகாசம் உள்ளது.

காலக்கெடு முடிந்த பிறகும் தாக்கல் செய்ய விரும்புவோர் 2026 டிசம்பர் 31 வரை Belated Return தாக்கல் செய்யலாம். மேலும், தவறுகள் இருந்தால் 2027 மார்ச் 31 வரை திருத்தப்பட்ட (Revised Return) கணக்கையும் சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காலதாமதமாக ITR தாக்கல் செய்தால் அபராதமும் விதிக்கப்படும். வருமான வரிச் சட்டம் பிரிவு 234F-ன் கீழ் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். ரூ.5 லட்சத்திற்கும் குறைவான வருமானம் பெறுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். வரி செலுத்த வேண்டிய நிலை இல்லாவிட்டாலும், காலக்கெடுவை மீறினால் அபராதம் விதிக்கப்படலாம்.

நிதி ஒழுங்கையும் சட்டப்பூர்வ பதிவையும் உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணமாக ITR விளங்குகிறது. எனவே, கடைசி நேர நெருக்கடியை தவிர்த்து, உரிய ஆவணங்களுடன் முன்கூட்டியே வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது சிறந்ததாகும்.