சென்னை: காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை எதிர்த்து, புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் தமிழக அரசின் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த முடிவு தமிழ்நாட்டின் நீருரிமைக்கு ஆபத்தாக முடியும் என்றும், தற்போதுள்ள சட்ட உரிமைகளை பலவீனப்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறான அரசியல் மற்றும் சட்ட அணுகுமுறை என சீமான் குறிப்பிட்டுள்ளார். ஆளும் தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்தில் இந்த அம்சம் இடம்பெற்றிருப்பதையும், அதை எதிர்க்கட்சியான திமுக ஆதரித்திருப்பதையும் அவர் விமர்சித்துள்ளார்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் ஏற்கனவே பல ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற உத்தரவு, காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தமிழ்நாட்டின் நீர்பங்கீட்டு உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீமான் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படுவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும், மாறாக ஏற்கனவே உள்ள சட்ட உரிமைகளை சிக்கலாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். குறிப்பாக, புதிய மன்றம் அமைக்கப்பட்டு அதன் தீர்ப்பு கர்நாடகாவுக்கு சாதகமாக வந்தால், தமிழ்நாடு தனது கடைசி சட்ட வாய்ப்புகளையும் இழக்கும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.

மேலும், கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேல்பாசன மாநிலங்கள் புதிய அணைகள் அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ள முடியாது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதி எனவும், அதனை உச்சநீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக அரசு கடந்த காலங்களிலும் பல அணைத் திட்டங்களை தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் சட்ட விதிகளையும் பொருட்படுத்தாமல் முன்னெடுத்ததாக குற்றம்சாட்டிய சீமான், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி போன்ற அணைகள் அதற்கு உதாரணம் என கூறினார். அதேபோல் மேகதாது அணை திட்டமும் காவிரி நீரின் மீது முழு கட்டுப்பாட்டை பெறும் முயற்சியாகவே பார்க்கப்பட வேண்டும் என்றார்.

தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 177.25 டி.எம்.சி. காவிரி நீரை கூட கர்நாடக அரசு முழுமையாக வழங்காமல் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஏற்கனவே உள்ள தீர்ப்புகளையே கர்நாடகா மதிக்காத நிலையில் புதிய நடுவர் மன்றம் எந்த பயனையும் அளிக்காது என்று கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும், காவிரி உரிமையை பாதுகாக்க சட்ட மற்றும் அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் சட்டமன்றத் தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் நீருரிமையை உறுதி செய்யும் புதிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஜூன் 27ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தீர்மான நகலெரிப்பு போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

காவிரி நீருரிமை தொடர்பான அரசியல் விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சீமானின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.