நியூயார்க்:
உலகின் மிகப்பெரிய கால்பந்து திருவிழாவாக கருதப்படும் 23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் போட்டிகளின் நடுவே தண்ணீர் இடைவேளை வழங்கப்படுவது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, போட்டியின் இரு பாதிகளிலும் வீரர்களுக்கு சில நிமிடங்கள் தண்ணீர் இடைவேளை வழங்கப்படுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாக கால்பந்து போட்டிகள் 90 நிமிடங்கள் நடைபெறும். இதில் முதல் 45 நிமிடங்கள் முடிந்த பின் அரைநேர இடைவேளை வழங்கப்படும். ஆனால் இந்த உலகக்கோப்பை தொடரில் கடுமையான வெப்பநிலை காரணமாக கூடுதலாக தலா 3 நிமிடங்கள் கொண்ட இரண்டு தண்ணீர் இடைவேளைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இடைவேளையின் போது வீரர்கள் தண்ணீர் அருந்தி உடல் சோர்வை குறைத்துக்கொள்வதுடன், மருத்துவ மற்றும் உடற்தகுதி குழுவினரிடமிருந்து ஆலோசனைகளையும் பெறுகின்றனர். கடுமையான வெயிலில் நீண்ட நேரம் விளையாடுவதால் ஏற்படும் நீரிழப்பு மற்றும் உடல் சோர்வை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தண்ணீர் இடைவேளை உண்மையில் வீரர்களின் நலனுக்காக அல்ல; கூடுதல் விளம்பர வருவாய் ஈட்டுவதற்காகவே அறிமுகப்படுத்தப்பட்டதாக சில தரப்பினர் குற்றம்சாட்டினர். குறிப்பாக ஒளிபரப்பு நிறுவனங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்களுக்கு கூடுதல் நேரம் வழங்கும் நோக்கில் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றன.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிபா விளக்கம் அளித்துள்ளது. பிபா தலைவர் ஜியான்னி இன்பான்டினோ இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில், தண்ணீர் இடைவேளை வழங்கப்படுவது முழுக்க முழுக்க வீரர்களின் நலனை கருத்தில் கொண்டே எனத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “இந்த உலகக்கோப்பை தொடருக்கான அனைத்து வணிக மற்றும் ஒளிபரப்பு ஒப்பந்தங்களும் பல மாதங்களுக்கு முன்பே கையெழுத்திடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. எனவே தண்ணீர் இடைவேளையால் பிபாவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கப் போவதில்லை. இது வர்த்தக நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல” என்றார்.
மேலும், “இந்த உலகக்கோப்பை தொடர் 39 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஒரு அணி இறுதிப்போட்டி வரை முன்னேறினால் மொத்தம் 8 போட்டிகள் வரை விளையாட வேண்டியிருக்கும். கடுமையான வெப்பநிலை நிலவும் சூழலில் வீரர்களின் உடல்நலனை பாதுகாப்பது மிகவும் முக்கியம். அதற்காகவே தண்ணீர் இடைவேளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் விளக்கமளித்தார்.
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா போன்ற நாடுகளில் கோடை கால வெப்பநிலை சில பகுதிகளில் 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இந்த சூழலில் வீரர்கள் தொடர்ந்து அதிக தீவிரத்துடன் விளையாடுவதால் நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனைத் தடுப்பதற்காக உலக சுகாதார மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிபாவின் இந்த விளக்கத்திற்குப் பிறகு தண்ணீர் இடைவேளை தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக பிபா மீண்டும் உறுதி செய்துள்ளது.