தமிழக அரசியலில் த.வெ.க. அரசுக்கும், திமுகவுக்கும் இடையே நிலவும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கைது மற்றும் குதிரைபேர விவகாரங்கள் தொடர்பாக, திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் செய்தியாளர்களிடம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“மூக்கறுபட்டது விஜய் அரசு” திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைச் சுட்டிக்காட்டிய பரந்தாமன், “இந்த வழக்கின் மூலம் விஜய் தலைமையிலான அரசு நீதிமன்றத்தில் மூக்கறுபட்டுள்ளது. அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்ய வேண்டிய எந்த முகாந்தரமும் இல்லாத நிலையில், அவரை காவல்துறை மூலம் மிரட்டி, த.வெ.க.வில் இணையச் சொல்லி பணம் கொடுத்து பேரம் பேசியுள்ளனர். பாஜக எப்படி அமலாக்கத்துறையை (ED) வைத்து மிரட்டுகிறதோ, அதே பாணியில் த.வெ.க. அரசு காவல்துறையை ஏவி விட்டு மிரட்டுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
“குற்றவாளிகள் நிரம்பிய கேபினட்” த.வெ.க. அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அவர் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்தார்:
-
நிர்மல் குமார்: நில மோசடி வழக்கில் 420 புகார்.
-
மரிய வில்சன்: வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கு (புதுச்சேரி நீதிமன்ற சம்மன்).
-
ஆதவ் அர்ஜுனா: தரக்குறைவான விமர்சனங்கள் மற்றும் அவதூறு பேச்சு.
-
பிற அமைச்சர்கள்: மீதான பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள்.
இத்தகைய பின்னணி கொண்டவர்களே அமைச்சரவையில் அங்கம் வகிப்பதாகவும், இவர்களுக்குத் திமுகவை விமர்சிக்க அருகதை இல்லை என்றும் பரந்தாமன் தெரிவித்தார்.
நிர்வாகத் திறமையின்மை ஆட்சிக்கு வந்து 55 நாட்களைக் கடந்தும், நிர்வாகத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று சாடிய அவர், ஆர்.ஜே. சரண் ஜெயராமன் உள்ளிட்ட சமூக வலைதளச் செயல்பாட்டாளர்களைக் கைது செய்வதையும், எதிர்கட்சிகளை மிரட்டுவதையுமே த.வெ.க. அரசு வேலையாகக் கொண்டுள்ளது என்றார். மேலும், “திராவிட முன்னேற்றக் கழகம் 59 இடங்களைக் கொண்டுள்ள நிலையில், ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பதாகக் கனவு காண்பது அடிப்படை புரிதல் இல்லாத செயல்” என்று அவர் விமர்சித்தார்.
தமிழக அரசியலின் மாண்பை சிதைத்து, மோசமான அரசியல் கலாச்சாரத்தை த.வெ.க. அரசு முன்னெடுப்பதாகவும், இனியாவது மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.