தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோவை ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரைக் கொலை செய்த வழக்கில், மெக்கானிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்துத் தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த வாழவல்லான் கொற்கை விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரது மகன் முருகவேல் (44). மெக்கானிக்கான இவர், சொந்தமாக மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 31.01.2021 அன்று இரவு மதுபோதையில் இருந்த முருகவேல், ஏரல் பாரதியார் ரோட்டில் உள்ள தள்ளுவண்டி கடையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து ஏரல் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர் பொன் சுப்பையா விசாரணை நடத்தி, குடிபோதையில் தகராறு செய்த முருகவேலின் மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தார். அங்குப் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலு (55), மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளைக் காவல் நிலையத்தில் நிறுத்தினர். மேலும், மறுநாள் காலையில் விசாரணைக்கு ஆஜராகி மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு முருகவேலிடம் கூறி அனுப்பியுள்ளனர்.
போலீசார் மீது லோடு ஆட்டோ மோதி கொலை: இந்த நிலையில், அடுத்த நாள் (01.02.2021) அதிகாலை 12.45 மணியளவில் கொற்கை நாலுமுக்கு ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் காவலர் பொன் சுப்பையா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு லோடு ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்த முருகவேலை போலீசார் சத்தம் போட்டுவிட்டுச் சென்றனர்.
தன் மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்த ஆத்திரத்திலும், போலீஸ் மீது இருந்த வன்மத்தாலும் முருகவேல் தான் ஓட்டிவந்த லோடு ஆட்டோவை வேகமாக விரட்டிச் சென்று, வாழவல்லான் ஊர்காத்த சுவாமி கோவில் முன்பு சென்றுகொண்டிருந்த போலீசாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதினார். இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலு பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற காவலர் பொன் சுப்பையா படுகாயமடைந்தார்.
நீதிமன்றத் தீர்ப்பு: இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது குறித்து ஏரல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றம் சாட்டப்பட்ட முருகவேல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம் ஆஜராகி வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.