தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 6 முதியவர்கள் படுகொலை – சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றத் தவறிய தவெக அரசு கூண்டோடு பதவி விலக வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு விவகாரம் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் தமிழக அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

தொடரும் படுகொலைகளுக்குக் கண்டனம்:

தனது எக்ஸ் தள பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளதாவது: “கடந்த 10 நாட்களில் மட்டும் நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து 6 முதியவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் கடந்த பின்னரும் கூட, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கைத் தங்களால் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறனின்மை கடும் கண்டனத்திற்குரியது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்கள் அதிகரிப்புக்கு விமர்சனம்:

மேலும் அவர் தனது அறிக்கையில், தமிழகத்தில் திரும்பும் இடமெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை கலாச்சாரம் மற்றும் மாமூல் வேட்டைகள் போன்ற சமூக விரோதக் குற்றச் செயல்கள் தலைதூக்கி நிற்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருக்கவும், குடும்பத்துடன் வெளியில் செல்லவும் தமிழக மக்கள் பெரிதும் அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது.

ஆனால், இத்தகைய தீவிரமான சட்டம்-ஒழுங்குச் சிக்கல்களைக் கையாளுவதைத் தவிர்த்துவிட்டு, ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் ஆளுக்கொரு ரீல்ஸ் எடுத்து, அதை ‘ட்ரெண்டிங் பிஜிஎம்’ (Trending BGM) உடன் பொருத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருவது மாண்பற்ற செயல் என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகக் கோரிக்கை:

சீரழிந்த சட்டம்-ஒழுங்கு சீர்படும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான், தங்களை “மாற்று சக்தி” என்று கூறிக் கொண்ட தவெக கட்சிக்குத் தமிழக மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் அளித்த அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் குறைந்தபட்ச செயல்திறன் கூட இல்லை என்றால், முதலமைச்சரும் அவரது அமைச்சர்களும் உடனடியாகக் கூண்டோடு பதவி விலகிக் கொள்ள வேண்டும். தகுதியான தலைமையை தமிழக மக்கள் தாங்களே தேடிக் கொள்வார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையின் மூலம் ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்.