சென்னை: தமிழகத்தில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள ‘கள்’ இறக்குவதற்கான தடையை நீக்கி, மீண்டும் அனுமதி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள முதல் வேளாண் பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற விவாதம் அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது.

ஒரு காலத்தில் தமிழகத்தில் கள் உற்பத்தி மற்றும் விற்பனை பரவலாக இருந்ததுடன், பாரம்பரியத் தொழிலாகவும் விளங்கியது. ஆனால், கள் விற்பனையில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் காரணமாக அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள், 1987 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தமிழகத்தில் கள் இறக்கத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அன்றிலிருந்து இன்று வரை இந்தத் தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.

கள் இறக்கு தடையின் பின்னணி:

கள் என்பது மரத்திலிருந்து இறக்கப்பட்ட உடனேயே உட்கொள்ளும்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற வாதம் ஒருபுறம் இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல அதில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து கல்லீரலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மருத்துவ ரீதியான கருத்தாக உள்ளது. மேலும், கடந்த காலத்தில் களின் போதையை அதிகரிக்க ‘குளோரல் ஹைட்ரேட்’ போன்ற ஆபத்தான ரசாயனங்கள் கலக்கப்பட்டதால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. பார்வை இழப்பு போன்ற தீவிர பாதிப்புகளும் பதிவாகின.

ஒவ்வொரு தென்னை மற்றும் பனை மரத்தையும் தனித்தனியாகத் தேடிச் சென்று ஆய்வு செய்து கள் விற்பனையைக் கண்காணிப்பது சாத்தியமற்றது என்பதாலும், அரசுக்கு நிலையான வருவாய் கிடைக்காததாலும் இந்தத் தடை அவசியமானதாகக் கருதப்பட்டது. இருப்பினும், கள் என்பது போதைப்பொருள் அல்ல என்றும், இது பாரம்பரிய உணவுப் பொருள் என்றும் கூறி விவசாயிகளின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தொடர்ந்து அனுமதி கோரி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் கள் இறக்க அனுமதி கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

வேளாண் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்:

தவெக தனது தேர்தல் அறிக்கையில் கள் இறக்குவது தொடர்பான எந்தவிதமான வாக்குறுதியையும் வெளிப்படையாக வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பாரம்பரிய விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பனை மற்றும் தென்னை மரத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையைக் கருத்தில் கொண்டும் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர் காலத்துத் தடையை தவெக அரசு மாற்றி அமைக்குமா அல்லது வழக்கம் போல தடை தொடருமா என்பது நாளைய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகே தெரியவரும்.