சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கான பிரத்யேகமான முதல் வேளாண் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் துறை அமைச்சர் வினோத் இந்த பட்ஜெட்டைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், விவசாயப் பயிர்க்கடன் முழுத் தள்ளுபடி மற்றும் விதைப்புக்கால நிதி உதவியாக ரூ.15,000 வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
முன்னதாக, தவெக அரசு தனது வேளாண் பட்ஜெட் வரைவு அறிக்கையுடன் அமைச்சர் வினோத் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் சிறிய அளவிலான சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நாளைய தினம் தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் தங்களது நீண்ட கால கோரிக்கைகளும், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுமா என்ற ஆவலுடன் உழவர்கள் காத்திருக்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகளும் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளும்:
-
பயிர்க்கடன் தள்ளுபடி: தவெக தனது தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.75,000 வரை பெற்ற கடன்களுக்கு மட்டுமே முழுத் தள்ளுபடி என்றும், அதற்கு மேல் பெற்றவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000 வரை மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. எனவே, நாளைய பட்ஜெட்டில் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
-
விதைப்புக்கால நிதி உதவி: சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள ஒவ்வொரு விவசாயிக் குடும்பத்திற்கும் விதைப்புக்கால நிதியுதவியாக ஆண்டுதோறும் ரூ.15,000, இரண்டு தவணைகளாக (ஜூலை – ஆகஸ்ட் பருவம் மற்றும் ஜனவரி – பிப்ரவரி பருவம்) வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த நிதி உதவி குறித்த அறிவிப்பு நாளைய வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு பலமாக உள்ளது.
-
கல்விச் செலவு ஏற்பு: 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்ற உழவர்கள் குடும்பத்தில் அரசு ஊழியர்கள் யாரும் இல்லாத பட்சத்தில், அவர்களின் குழந்தைகளின் மருத்துவம், பொறியியல் மற்றும் இதர உயர்கல்விக்கான முழுச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற முக்கிய வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. விவசாயப் பெருங்குடி மக்களின் பிள்ளைகளின் கல்விக் கனவை நனவாக்கும் இந்த உன்னதமான திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் கோரிக்கைகளுடனும் காத்திருக்கும் விவசாயிகளுக்கு எந்தளவுக்கு நிம்மதி அளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.