இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் நலமுடன் இருப்பதாக கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.

கட்சியின் பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் தேசியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மு.வீரபாண்டியன் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி டெல்லி சென்றிருந்தார்.

இந்நிலையில், செப்டம்பர் 1 அதிகாலையில் அவருக்கு திடீரென தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.

பின்னர் உடனடியாக சென்னை திரும்பிய அவர், செப்டம்பர் 1 மாலை 3 மணியளவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் தற்போது குறைந்துள்ளதாகவும், உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக இருந்தால் இன்று மாலை அல்லது நாளை காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.