மேடையில் பகுத்தறிவு பேசிக்கொண்டு, திரைமறைவில் இத்தனை பாகுபாடுகளை ஏன் செய்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட தனது பதிவில் அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 20 லட்சம் தமிழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்து, சுமார் ரூ.2,000 கோடி ஒதுக்கியது. ஆனால் தற்போது வெறும் 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது, வெளிப்படையான ஏமாற்று செயல். பல லட்சம் மாணவர்கள் உள்ள நிலையில், வெறும் 10 லட்சம் பேரை மட்டும் எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்? மேடையில் பகுத்தறிவு பேசிக்கொண்டு திரைமறைவில் பாகுபாடுகள் ஏன்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமாக 2011 முதல் நடைமுறையில் இருந்த இலவச மடிக்கணினி திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்துசெய்த திமுக, தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் அந்தத் திட்டத்தை தூசி தட்டி எடுப்பது எதற்காக? இதனால் முதல் தலைமுறை மாணவர்கள் திமுகவுக்கு ஓட்டு போடுவார்கள் என நினைக்கிறார்களா?
அதேபோல் குடிநீர், கழிவறை, பேராசிரியர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், திமுக அரசின் இந்த நடவடிக்கையை எப்படித் தாங்கிக் கொள்வார்கள்?
ஒரு ஆண்டுக்கான ஆட்சியை வைத்துக் கொண்டே, இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பட்ஜெட்டை ஒதுக்கியதற்கு காரணம் என்ன? அடுத்த ஆட்சிக்கான பட்ஜெட்டைத் திமுக அரசு எப்படிக் கணக்கிட்டது? எப்படியும் அடுத்த முறை ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற எண்ணத்திலா மாணவர்களின் ஆசைகளையும் கனவுகளையும் பலியாக்குகிறார்கள்? என அவர் பதிவில் தெரிவித்துள்ளார்.