சென்னை: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், தாயுமானவர் திட்டம் சார்பில் ரூ.74.20 கோடி செலவில் கட்டப்பட்ட 21 பள்ளிகளுக்கான கூடுதல் கட்டிடங்கள், 25 கிராம அறிவுசார் மையங்கள் மற்றும் 2 சமூகநீதி விடுதிக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.
மேலும், சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் கடனுதவி உள்ளிட்ட ரூ.265.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 9,371 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், சிறு வியாபாரிகள், திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினருக்கான உதவிகள் வழங்கப்பட்டன.
முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் தீவிர வறுமையில் உள்ள குடும்பங்களை மேம்படுத்தும் நோக்கில், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, தொழில் கடன், சுயஉதவிக் குழு இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது.