ஆந்திரப் பிரதேசத்தில், தோல் நிறத்தை காரணமாகக் கொண்டு மருமகளை வீட்டிலிருந்து விரட்டிய அதிர்ச்சி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்நாடு மாவட்டம் வினுகொண்டா மண்டலம் நடுகட்டா கிராமத்தைச் சேர்ந்த கோபிலட்சுமி என்ற இளம் பெண், திருமணத்திற்குப் பிறகு மூன்று மாதங்களிலேயே கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரால் கடுமையான துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புகார் அளித்துள்ளார்.
கோபிலட்சுமி மற்றும் கோடீஸ்வரராவ் ஆகியோரின் திருமணம் கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெற்றது. திருமணத்தின் போது 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கோபிலட்சுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு சில மாதங்களிலேயே, கோபிலட்சுமியின் கருப்பு நிறத்தை காரணமாகக் கொண்டு கணவர் அவளை ஒதுக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது. மாமனார் மற்றும் மாமியாரும் அவளை அவமதித்து, கூடுதலாக வரதட்சணை கோரி துன்புறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துன்புறுத்தல் அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்தில் மாமியார் நேரடியாக கோபிலட்சுமியை வீட்டிலிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த அவமானத்தால் மனமுடைந்த கோபிலட்சுமி, தனது கணவர் வீட்டின் முன்பாகவே உண்ணாவிரதப் போராட்டத்தில் அமர்ந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இந்த போராட்டம் கிராம மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
இதனை அறிந்த கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபிலட்சுமி போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், கணவர் கோடீஸ்வரராவ் உட்பட மூவர்மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம், தோல் நிற அடிப்படையிலான பாகுபாடு இன்னும் சமூகத்தில் எவ்வளவு ஆழமாக பதிந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக சட்டங்கள் இருந்தாலும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலைக்குரியது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கோபிலட்சுமிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்ததும் குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.