திருச்சி:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) திருச்சிக்கு வருகிறார். இந்த பயணத்தின் போது அரசியல் ஆலோசனைகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தொழிலதிபர்கள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

அமித்ஷா நாளை தனியார் விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடையவுள்ளார். அங்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின், அவர் நகரிலுள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து இரவு ஓய்வெடுப்பார். நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை, திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்படுவார்.

காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் அவர் தரையிறங்குவார். பின்னர் கார் மூலம் காரைக்கால் நகராட்சி மைதானத்திற்கு சென்று, காலை 11 மணிக்கு பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அந்த கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றி, தமிழகத்தில் கட்சியின் அடுத்தடுத்த அரசியல் திட்டங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக்கூட்டம் முடிந்த பின், அமித்ஷா மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி திரும்புவார். அங்கிருந்து விமானம் மூலம் சேலத்திற்கு புறப்படுவார்.

அமித்ஷா தங்கியிருக்கும் நாட்களில் மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல். முருகன், பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் நயினார்நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் திருச்சியில் முகாமிட உள்ளனர். அவர்களும் அமித்ஷாவுடன் இணைந்து பல்வேறு ஆலோசனைகளில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும், திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள “பாரதம் அடுத்த தசாப்தம் – தொழிலதிபர்கள் சந்திப்பு” என்ற நிகழ்ச்சியிலும் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் இந்தியா முழுவதும் இருந்து பா.ஜனதா கட்சியைச் சார்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அமித்ஷாவின் இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, தமிழக அரசியல் நிலைமைகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் திட்டங்கள் குறித்து உயர்நிலை ஆலோசனை நடைபெறும் வாய்ப்பு இருப்பதாக பா.ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆலோசனை நாளை மாலை அல்லது நாளை மறுநாள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.