சென்னை :
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,274 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதற்காக போட்டித் தேர்வு நடத்தப்பட்டு ஏழு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனாலும் இதுவரை முடிவுகள் வெளியிடப்படவில்லை. இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் செயலாகும்,” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் ஆறு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுவதற்காக 3,274 பேரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 21 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். பின்னர் கடந்த ஜூலை 27-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது,” என்றார்.
அன்புமணி ராமதாஸ் மேலும் குறிப்பிட்டதாவது: “எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு செய்முறைத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. ஆனால் எழுத்துத் தேர்வுகள் முடிந்து ஏழு மாதங்கள் ஆகும் நிலையில், அரசு இதுவரை முடிவுகளை வெளியிடவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திணறுகின்றனர்,” என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தின் அடித்தட்டில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு இந்த வேலை கிடைத்தால் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக நிலைநிறுத்தப்படும். ஆனால், அரசு அலட்சியம் காட்டி முடிவுகளை வெளியிடாமல் தாமதிப்பது நீதியற்ற செயல். இது இளைஞர்களின் நம்பிக்கையை பாதிக்கிறது,” என்றார்.
அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியதாவது: “போக்குவரத்துத் துறை உடனடியாக ஆள்தேர்வு முடிவுகளை வெளியிட்டு, தகுதியானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். இதன் மூலம் ஏழை இளைஞர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் எதிர்கால நம்பிக்கையையும் காக்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.