செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி இயக்காமல் விடக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆலையை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளர்களும் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 29,632 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும், ஆலைக்கு உட்பட்ட பல கரும்பு கோட்டங்களில் சாகுபடி செய்யப்படும் கரும்பு இங்கு அரைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்த இந்த ஆலையில், சமீப ஆண்டுகளில் அரவை அளவு கடுமையாக குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது முறையே 69,360 டன் மற்றும் 53,928 டன் என்ற அளவுக்கு சரிந்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

கரும்பு சாகுபடி பரப்பு குறைந்ததே ஆலையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்றும், கரும்பு அலுவலர் மற்றும் துணை கரும்பு அலுவலர் போன்ற முக்கிய பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாததால் சாகுபடியை அதிகரிக்கும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக அரசு கரும்பு சாகுபடியை ஊக்குவித்து, தேவையான பணியிடங்களை நிரப்பி, ஆலையை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், அரசு கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தும் சூழலில் எதிர்காலத்தில் சாகுபடி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், பழமையான இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை மூடுவது நியாயமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.