கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் காதல் உறவுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தாய், தந்தை மற்றும் சகோதரியை கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படும் இளம்பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் கிழக்கு பகுதியில் உள்ள கே.ஆர்.புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீகேஹள்ளி பகுதியில் அமைந்துள்ள தம்னிகா லேஅவுட்டில் உள்ள சாய் அபார்ட்மெண்டில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, சோமசுந்தர் (55), அவரது மனைவி முத்துலட்சுமி (48) மற்றும் இளைய மகள் சுப்ரியா (20) ஆகியோர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த தம்பதியரின் மூத்த மகளான ஸ்வேதா, கென்னத் என்ற இளைஞருடன் காதல் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வசித்து வந்ததாகவும், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தனியாக வாடகை வீட்டில் குடியேறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த காதல் உறவுக்கு ஸ்வேதாவின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு சோமசுந்தர், முத்துலட்சுமி மற்றும் சுப்ரியா ஆகியோர் ஸ்வேதாவை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது காதல் உறவு குறித்து மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஆத்திரமடைந்த ஸ்வேதாவும், அவரது காதலன் கென்னத்தும் இணைந்து பெற்றோர் மற்றும் சகோதரியை தாக்கியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலில் மூவரும் உயிரிழந்த நிலையில், சம்பவத்தைத் தொடர்ந்து காதல் ஜோடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள கே.ஆர்.புரம் போலீசார், தலைமறைவாக உள்ள ஸ்வேதா மற்றும் கென்னத் ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நகரின் பல பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு காதல் உறவை மையமாகக் கொண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் பெங்களூரு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.