மொஹரம் பண்டிகை மற்றும் வார இறுதி தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பயணிகளின் வசதிக்காக ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
ஜூன் 26-ந்தேதி மொஹரம் பண்டிகை, அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தொடர் விடுமுறை நாட்கள் வருவதால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளையும் இயக்க திட்டமிட்டுள்ளன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஜூன் 25-ந்தேதி மட்டும் 525 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தலா 315 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜூன் 25-ந்தேதி 85 சிறப்பு பேருந்துகளும், 26 மற்றும் 27-ந்தேதிகளில் தலா 75 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் ஜூன் 25 முதல் 27 வரை தினமும் 14 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனுடன் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களிலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தொடர் விடுமுறையை முடித்து மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஜூன் 28-ந்தேதி மட்டும் மாநிலம் முழுவதும் இருந்து 615 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் முன்பதிவு செய்யும் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை வியாழக்கிழமை பயணத்திற்கு 12,445 பேரும், வெள்ளிக்கிழமை 5,846 பேரும், சனிக்கிழமை 3,815 பேரும், ஞாயிற்றுக்கிழமை 12,642 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே நீண்ட தூர பயணம் மேற்கொள்ள உள்ளவர்கள் கடைசி நேர நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே பயணச்சீட்டை பதிவு செய்து கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. பயணிகள் TNSTC அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது TNSTC Official Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக அதிகளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணத்தை மேற்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.