ரஷ்ய அதிபர் புடின் டெல்லி வருகை; பிரதமர் மோடி விமான நிலையத்தில் வரவேற்பு
புதுடெல்லி:
இரு நாள் பயணத்திற்காக ரஷ்ய அதிபர் வლადிமிர் புடின் இன்று (டிசம்பர் 4) இரவு டெல்லி வந்தடைந்தார். விமான நிலையம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவரை கட்டியணைத்து வரவேற்றார். விமான நிலையத்தில் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும், கலைய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.
புடின், உக்ரைன் மீது போர் துவங்குவதற்கு முன், 2021 டிசம்பரில் இந்தியா வந்திருந்தார். அதன்பின் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் இந்தியா வருகிறார். இரு நாள் பயணத்தில், அவர் டெல்லியில் நடைபெறும் 23வது இந்தியா–ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இன்று அவருக்காக பிரதமர் இல்லத்தில் விருந்துக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை ஜனாதிபதி மாளிகையில் புடினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, திரவுபதி முர்முவையும், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் புடின் சந்திக்க உள்ளார்.
‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின் போது ரஷ்யாவின் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் முக்கிய பங்கு வகித்தது. இந்த சூழலில் புடின் வருகை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புடின் வருகையை முன்னிட்டு டெல்லி விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.