சென்னை:
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக) முழுமையான ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து, விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதார ஆதாரமாக விளங்கும் விவசாயத் துறையும் திட்டமிட்ட வகையில் தனியார்மயமாக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

‘மேக் இன் இந்தியா’ என்ற முழக்கத்தை முன்வைத்து மத்திய அரசு பேசிவந்தாலும், நடைமுறையில் கடந்த 12 ஆண்டுகளாக நிலக்கரி, மின்சாரம், ரயில்வே உள்ளிட்ட முக்கியமான துறைகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்ச்சியாக தற்போது இந்திய விவசாயத்தையே பாதிக்கும் வகையில் அமெரிக்காவுடன் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டிருப்பது, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் விவசாயிகளின் எதிர்காலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், டெல்லி எல்லையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கடும் குளிர், மழை உள்ளிட்ட இயற்கை இன்னல்களை எதிர்கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையிலும், அவர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என வேல்முருகன் சுட்டிக்காட்டினார். ஆனால், வெளிநாட்டு அரசுகளின் மற்றும் பெருநிறுவனங்களின் வர்த்தக நலன்களுக்காக இந்திய விவசாயிகளைப் பலிகொடுக்க மத்திய அரசு தயாராக இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் 140 கோடி மக்கள், நாட்டின் வளமான விவசாய நிலங்கள் மற்றும் இயற்கை வளங்கள் அனைத்தும் அந்நிய நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு வருவதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒருபோதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என அவர் வலியுறுத்தினார். நாட்டின் வளங்கள் ஒவ்வொன்றாக ஏலமிடப்படுவதும், விவசாயிகள் கடன் சுமை, உற்பத்திச்செலவு உயர்வு, குறைந்த ஆதார விலை போன்ற பிரச்னைகளால் தள்ளாடி வருவதும் மிகுந்த கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை மீட்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற உள்ள விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழுமனதோடு ஆதரவு வழங்கும் என்றும், ஜனநாயக முறையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் அனைத்து மக்களும் பங்கேற்று விவசாயிகளுக்கு ஒற்றுமையாக துணை நிற்க வேண்டும் என்றும் தி.வேல்முருகன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.