சென்னை:

சென்னையில் பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரை போலியாக பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து உதிரிபாகங்களை பெற்று ரூ.35 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவன்-மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, பிற நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்கப்பட்டு மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நிறுவனம் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் போது, இந்த மோசடிக்கு பின்னால் திட்டமிட்ட கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அம்பத்தூரை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகீம் (40), அவரது மனைவி ஆஷிகா (35), மற்றும் அவர்களது உறவினர்களான முக்தார் அகமது, ஜாகீர் உசேன் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அப்துல் ரகீம், கடந்த காலத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது தெரியவந்தது. பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிய அவர், நிறுவனத்தின் பெயர் மற்றும் விவரங்களை பயன்படுத்தி மோசடி செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அப்துல் ரகீம், அந்த நிறுவனத்தின் பெயரில் போலியான லெட்டர்பேட்கள் மற்றும் ஜி.எஸ்.டி. பதிவு எண்களை தயாரித்துள்ளார். அவற்றை பயன்படுத்தி, “நிறுவனத்திற்கு அவசரமாக உதிரிபாகங்கள் தேவை” என்று கூறி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை பெற்றுள்ளார்.

ஆனால், பொருட்களை பெற்ற பிறகு அதற்கான தொகையை செலுத்தாமல் ஏமாற்றியுள்ளார். பின்னர் மோசடியாக பெற்ற உதிரிபாகங்களை சந்தையில் விற்பனை செய்து பணமாக மாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அப்துல் ரகீம் இதற்கு முன்பும் இதேபோன்ற மோசடி வழக்குகளில் சிக்கியவர் என்றும், சைபர் கிரைம் போலீசாரால் இரண்டு முறை கைது செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டதால் அவரது வங்கி கணக்கு ஏற்கனவே முடக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் தனது மனைவி ஆஷிகாவின் வங்கி கணக்கை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார். பின்னர் அவரது மனைவியின் வங்கி கணக்கும் முடக்கப்பட்ட நிலையில், உறவினர்களான முக்தார் அகமது மற்றும் ஜாகீர் உசேன் ஆகியோரின் வங்கி கணக்குகள் மூலம் பணப் பரிவர்த்தனைகளை தொடர்ந்துள்ளார்.

இந்த மோசடி நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயல்பட்ட காரணத்தினால் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி மூலம் கிடைத்த பணத்தின் பரிவர்த்தனை விவரங்கள், வங்கி கணக்குகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆஷிகாவுக்கு 11 மாத குழந்தை இருப்பதாக கூறப்படுகிறது. சட்ட விதிமுறைகளின்படி, குழந்தையுடன் ஆஷிகா மற்றும் மற்ற மூன்று பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நால்வரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலி ஆவணங்கள், போலி ஜி.எஸ்.டி. எண்கள் மற்றும் நிறுவன அடையாளங்களை பயன்படுத்தி நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்கள் எந்தவொரு கொள்முதல் உத்தரவும் பெறும்போது அதன் உண்மைத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.