மகள் திருமண கருத்துக்கு ஆதரவு: சத்யராஜ் களமிறங்கினார்
சென்னை: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக மாறியவர் நடிகர் சத்யராஜ். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தாலும், கோயம்புத்தூரை விட்டு சென்னை வந்து கஷ்டங்களைத் தாண்டி சினிமாவில் இடம் பிடித்தவர். பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி வருபவர்.

திமுக நிர்வாகி, ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் பேட்டியில், “திருமணம் செய்த பிறகே குழந்தை பெற வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்கவில்லை. திருமணமின்றி குழந்தை பெறலாம்” என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
திவ்யா மேலும் கூறினார்: “எனக்கு ஜாதகம் இல்லை என்பதைப் பெருமையாகப் பார்க்கிறேன். தந்தை என் வாழ்க்கை முடிவுகளுக்கு ஒருபோதும் தடை செய்யவில்லை. என் மகிழ்ச்சி அவருக்கு முக்கியம். திருமணம் செய்வது என் தேர்வு” என்றார்.
சமூக வலைதளங்களில் “என்ன மாதிரி பேச்சு திவ்யா? சத்யராஜ், உங்கள் மகளின் கருத்து சரியில்லை. இது வளர்ப்பா?” என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலடி அளித்த சத்யராஜ்: “நான் தீவிர பெரியாரவாதி. ஜாதி-மத சடங்குகளுக்கு உடன்பாடில்லை. திருமணம் தனிநபர் விருப்பம். இன்றைய மருத்துவ வசதிகளால் திருமணமின்றி குழந்தை பெறலாம். மகளின் முற்போக்கு கருத்துகளுக்கு முழு ஆதரவு தருகிறேன்.”
சத்யராஜின் இந்த ஆதரவு சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. பெரியார் கொள்கைகளைப் பின்பற்றும் சத்யராஜ் குடும்ப பெண்களின் சுதந்திரத்தை வலியுறுத்தியுள்ளார்.