சென்னை:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மே 2-ம் தேதி வரை வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேசமயம், சில மாவட்டங்களில் மழை வாய்ப்பும் இருப்பதால், வரும் நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பமும், ஈரப்பதமும் மாறுபட்ட நிலைமைக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி. ஆர். துரை வெளியிட்ட செய்திக் குறிப்பில், வடக்கு தெலங்கானா முதல் குமரிக்கடல் வரை சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில், உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புள்ளது.

அதேபோல், ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு பக்கம் மழை வாய்ப்பு இருந்தாலும், மறுபக்கம் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் நிலை தொடர்ந்து இருக்கும்.

அதிகபட்ச வெப்பநிலை குறித்து வெளியிடப்பட்ட தகவலில், இன்று முதல் மே 2-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வுடன் ஈரப்பதமும் அதிகரிக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பமும் ஈரப்பதமும் அதிகரிக்கும் நிலையில், பொதுமக்கள் தேவையற்ற வெளிநடமாட்டத்தை குறைத்து, போதிய தண்ணீர் அருந்தி, வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.