மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தல் பணிகளை கண்காணிக்க மூன்று தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் நிர்வாகம் இதற்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.

மதுராந்தகம் தொகுதிக்கான பொது தேர்தல் மேற்பார்வையாளராக போர் சிங் யாதவ், காவல் மேற்பார்வையாளராக கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால், தேர்தல் செலவின மேற்பார்வையாளராக வாவல் வைபவ் பாலாசாகேப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு ஏற்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள், பாதுகாப்பு மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் உள்ளிட்ட பணிகளை இவர்கள் கண்காணிப்பார்கள்.

மதுராந்தகம் தனித் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9 முதல் 16 வரை நடைபெறும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.

திமுக சார்பில் ஐ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் ஆகியோர் களமிறங்கியுள்ளதால் மதுராந்தகத்தில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழக்கமான புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதில் வாக்குச்சாவடியின் பெயர், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றை காட்டியும் வாக்களிக்கலாம்.