காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று, செப்டம்பர் 1, 2026 தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் பங்கேற்று அணையின் மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றினார்.

மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்த முதல்வர் விஜய்க்கு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் சாலை மார்க்கமாக மேட்டூர் நோக்கிச் சென்றார்.

மேச்சேரி பகுதியில் வந்தபோது முதல்வர் விஜய் திறந்த வேனில் நின்றபடி சாலை வலம் மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தார். மக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழக்கமாக காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதுமான நீர் இருப்பு இல்லாததால் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் 93 ஆண்டு வரலாற்றில் தாமதமாக திறக்கப்படுவது இது 62-வது முறை; செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படுவது 4-வது முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய திட்டப்படி 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அணை நீரை பயன்படுத்தி காவிரி டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.10 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் மேட்டூர் அணை முக்கிய ஆதாரமாக உள்ளது.

மேட்டூர் அணை திறப்பு விழாவையொட்டி 3,800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.