சென்னை:
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம் முதலே ஏழை, எளிய மக்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சிக் காலங்களில் தரமான நூல் வழங்கப்பட்டு, நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தயாரித்த வேட்டி–சேலைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டன.
ஆனால் 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த 4 ஆண்டுகளாக பொங்கல் காலத்தில் வழங்கப்பட்ட இலவச வேட்டி–சேலைகள் ஏப்ரல்–மே மாதங்களில் தான் வழங்கப்படுகின்றன. இது முதல்வர் மு.க. ஸ்டாலினின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது. மேலும் 50% க்கும் அதிகமான வேட்டி–சேலைகள் வெளிமாநிலங்களில் இருந்து முறைகேடாக வாங்கப்பட்டதால், தமிழக கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள் வேலை இழந்து துன்புறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களை பலவீனப்படுத்தும் நோக்கில், தரமற்ற நூலை வழங்கி, அதற்கான பழியை சங்கங்களின் மீது சுமத்த முயற்சி திமுக அரசின் கைத்தறித் துறையால் நடக்கிறது என நெசவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2026-ஆம் ஆண்டு இலவச வேட்டிகளை நெய்ய தரமற்ற பாவு நூலை கூட்டுறவு நூற்பாலைகளுக்கு வழங்கியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
அரசு தானே தரமற்ற நூலை விநியோகித்துவிட்டு, வேட்டி–சேலைகளை நெய்யும் கூட்டுறவு சங்கங்களின் மீது குற்றச்சாட்டை சுமத்துகிறது என்பது கைத்தறித் துறையின் அவலமாகும். தரமற்ற நூல்களுக்குப் பொறுப்பு ஏற்க சங்கங்கள் எப்படி முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
30 ஆண்டுகளில் இல்லாத வகையில், 4 லட்சம் கைத்தறி வேட்டிகளிலும், 13 லட்சம் விசைத்தறி வேட்டிகளிலும் தர குறைபாடுகள் உள்ளதாக கூறி, அவற்றை திருப்பி அனுப்ப வேண்டும் என திமுக அரசு உத்தரவிட்டுள்ளது. தரம் குறைந்த நூலை வழங்கியதும் கைத்தறித் துறையேயாகும்; இதன் பின்னணியில் உள்ள ஊழலை மறைக்க சங்கங்களுக்கு பழி சுமத்துகிறது என்பது கண்டிக்கத்தக்கது.
10 ஆயிரம் வேட்டிகளுக்கு வெறும் 20 வேட்டிகளை மட்டும் மாதிரி செய்து தரச் சோதனை செய்ததாகவும் நெசவாளர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஏற்கெனவே நட்டநிலையில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு இலட்சக்கணக்கான வேட்டிகளை திருப்பி அனுப்புவது, அவற்றை மூடப்படும் நிலைக்கு தள்ளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து வேட்டிகளுக்கும் மீண்டும் ஒருமுறை தரப்பரிசோதனை மேற்கொள்ள திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தொடர்ந்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் தக்க பதிலளிப்பார்கள்,” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.