லாகூர்,

பாகிஸ்தான் ஹாக்கி அணியைச் சேர்ந்த கேப்டன் அமாத் ஷகீல் பட்டுக்கு விதிக்கப்பட்ட இரு ஆண்டு தடை ரத்து செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் விளையாட்டு உலகில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற புரோ ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஆடியது. அங்கு ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தலா இரண்டு ஆட்டங்கள் என மொத்தம் நான்கு ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. ஆனால், அத்தொடரில் அணிக்கு ஒரே ஒரு வெற்றியும் கிடைக்காமல் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி அடைந்தது.

போட்டி முடிந்து தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அமாத் ஷகீல் பட்ட், பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். “ஆஸ்திரேலியா சென்றபோது, நாங்கள் தங்க வேண்டிய ஓட்டலுக்கு முன்பணம் செலுத்தப்படாததால் பல மணி நேரம் சாலையோரத்தில் காத்திருக்க வேண்டி வந்தது. பின்னர் தங்கிய இடத்திலும் தேவையான வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை. சமையலறையை நாங்களே சுத்தம் செய்ய வேண்டிய நிலையும், துணிகளை நாங்களே துவைக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையிலும் எப்படிச் சிறப்பாக விளையாட முடியும்?” என அவர் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த கருத்துகள் பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கருதி, சம்மேளனத் தலைவர் தாரிக் புக்தி, அமாத் ஷகீல் பட்டுக்கு இரண்டு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தார். அதே சமயம், இதற்கான பொறுப்பை ஏற்று தானும் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் இடைக்காலத் தலைவராக முகைதீன் அகமது வானி நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன், அமாத் ஷகீல் பட் மீது விதிக்கப்பட்ட தடை “சட்டவிரோதமானது மற்றும் சம்மேளனத்தின் அடிப்படைச் சாசனத்துக்கு எதிரானது” என்று அறிவித்து அதனை உடனடியாக ரத்து செய்தார்.

இந்த முடிவால் பாகிஸ்தான் ஹாக்கி அணியில் புதிய உற்சாகம் நிலவுகிறது. தேசிய அணியில் மீண்டும் சேர்க்கப்படவுள்ள கேப்டன் ஷகீல் பட்டின் மீதான தடை நீக்கம், அடுத்த தொடர்களில் அணிக்கு வலுசேர்க்கும் என விளையாட்டு வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.