நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் சிலர் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அதே பள்ளியில் பயிலும் ஒரு மாணவி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தது பின்னர் வெளியேறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்து இருப்பது தென்படுகிறது. அவர்களில் ஒருவர் பிளாஸ்டிக் டம்ளரில் மதுபானத்தை ஊற்றி, அதில் தண்ணீர் கலந்து மற்ற மாணவிகளுக்கு வழங்குகிறார். பின்னர் அனைவரும் டம்ளரை உயர்த்தி ‘சியர்ஸ்’ என கூறி குடிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. பள்ளி சீருடையில் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சம்பவம் நடந்தது பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் பள்ளியில்தான் என்பதும், வீடியோவில் காணப்படும் மாணவிகள் அந்த பள்ளியின் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் வழங்கினர்.

பள்ளி நிர்வாகம் உடனடியாக உள்துறை விசாரணை நடத்தியதில், மதுபானம் அருந்திய மாணவிகள் 9-ம் வகுப்பு மாணவிகள் என்பது தெரியவந்தது. தற்போது பள்ளி விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், பள்ளி வளாகத்தில் காலியாக இருந்த ஒரு வகுப்பறை தற்காலிக விடுதியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த வகுப்பறையில் மற்ற மாணவிகள் உணவு உண்டுகொண்டிருந்த நேரத்தில், 9-ம் வகுப்பு மாணவிகள் குழுவாக அமர்ந்து மது அருந்தியிருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவிகளை அழைத்து கவுன்சிலிங் வழங்கியது. பின்னர் பள்ளி ஒழுங்கு விதிகளை மீறி அநாகரீகமாக நடந்துகொண்ட 6 மாணவிகள் இடைக்காலமாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதேசமயம், மாணவிகளுக்கு மதுபானம் வழங்கியவர்கள் யார் என்பது குறித்து பெற்றோர்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர். மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், சிறுவர்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.