சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கடலூர் மாவட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு, கட்சியின் வளர்ச்சி, தலைவர் விஜயின் பணியாற்றும் மனப்பாங்கு மற்றும் வரவிருக்கும் தேர்தல் வெற்றி குறித்து உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் கலந்து கொண்டு, கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.
உரையாற்றிய புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது:
“தலைவர் விஜய்க்கு மிகவும் பிடித்த மாவட்டம் கடலூர். புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் மக்களுக்கு உதவி செய்தவர் அவர். கடந்த 32 ஆண்டுகளாக மக்களுக்காக தன்னலமின்றி சேவை செய்து வருகிறார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தலைவர் விஜய் நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு, நம்பிக்கை ஆகியவை உள்ளன. மக்கள் நலனுக்காகவே செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விஜய் அரசியலுக்கு வந்தார். அவர் ஓய்வு பெற்ற பிறகோ, படம் ஓடாமல் போனதாலோ அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவைக்காகவே தனது உச்சநிலையை விட்டுவிட்டு அரசியலுக்குள் நுழைந்தவர்,” எனக் கூறினார்.
அதேபோல், “விஜய் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாலே போதும், அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தப் பட உரிமை விற்று விடும். யார் முதலில் வாங்குவது என தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அந்த அளவுக்கு மக்களிடையே நம்பிக்கை பெற்றவர் தான் தலைவர் விஜய்,” என புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
“தமிழக வெற்றிக் கழகம் உண்மையான தொண்டர்களின் கட்சி. நம்மிடம் பணம் இல்லாமலே பரவாயில்லை; உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. ‘நான் ஊழல் செய்ய மாட்டேன், என்னுடன் இருப்பவர்கள் யாரும் ஊழல் செய்ய மாட்டார்கள்’ என்று உறுதியுடன் கூறிய ஒரே தலைவர் விஜய் தான்,” எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக அரசை விமர்சித்த அவர், “திமுக அரசு மக்களுக்கு எதையும் செய்து வைக்கவில்லை. அவர்கள் செய்த சில திட்டங்களும் மக்களின் வரிப்பணத்தில்தான் செய்யப்பட்டவை. அதையும் சரியாக கையாளாமல், திறமையற்ற ஆட்சியை வழங்கி வருகின்றனர். நீங்கள் எப்படிப் வேடம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஒரே தளபதி – தலைவர் விஜய்தான்,” என்று கடுமையாக தாக்கினார்.
கடலூர் மாவட்டத்தின் 9 சட்டமன்ற தொகுதிகளும் தவெக வலுவான கோட்டையாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், “வரவிருக்கும் தேர்தலில் விஜய் முதலமைச்சராக பதவியேற்பது உறுதி. பெண்கள் பாதுகாப்பான சூழலில் வாழும் ஆட்சியை ஏற்படுத்துவோம். எனவே ஒவ்வொரு தொண்டரும் கடுமையாக உழைத்து, ‘விசில்’ சின்னத்தை வீடு தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்,” என புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தினார்.