ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்ய இருப்பதாக சரத்குமார் அறிவிப்பு

நெல்லை: பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினரும், பிரபல நடிகருமான சரத்குமார், நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசியல் நிலைமை, வரவிருக்கும் தேர்தல், தனது பங்கு குறித்து விரிவாக கருத்து தெரிவித்தார்.

சரத்குமார் கூறியதாவது: “தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் 90 சதவீதம் மத்திய அரசின் திட்டங்களே. ஆனால், அவற்றுக்கு தி.மு.க. தனது பெயரை வைத்துக்கொள்கிறது. மதச்சார்பின்மை குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையாக உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் அரசு மாறி மாறி பேசிவருகிறது.”

அவர் மேலும் கூறியதாவது: “தமிழக வெற்றிக் கழகம் என்று முழுமையாக சொன்னால் எனக்கு தெரியவில்லை. த.வெ.க., இ.வெ.க., மு.வெ.க. என்று சொன்னால்தான் தெரிகிறது. அரசியல் கட்சி தொடங்கியவுடன் தேர்தல் பணி தொடங்குவது அவர்களது வேலை. அதனை அவர்கள் தொடங்கியுள்ளனர். விஜயை பிரமாண்டமாக காட்டி, அவரது கட்சி பெரிய கட்சியாக மக்கள் மத்தியில் காட்டப்படுகிறது.”

பா.ஜ.க. குறித்து அவர் கூறியதாவது: “உலகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.தான் பெரிய கட்சிகள். 2026 சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிடவைத்து வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன்.”

தனது பங்கு குறித்து அவர் வலியுறுத்தியதாவது: “ஜனவரி மாதம் கூட்டணி நிர்ணயிக்கப்பட்ட பின்னர், முழுமையாக இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகி வருகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும், பிறருக்காக, ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம். அதற்காகவே நான் முழுமையாக பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்.”

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.