நாமக்கல் அருகே பள்ளி ஆண்டு விழா ஒத்திகையின் போது ஏற்பட்ட விபரீதத்தில், விஷப் பூச்சி கடித்ததால் மூன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 87 கவுண்டம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தப் பள்ளி கட்டப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் பலர் கலந்துகொண்டு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பயிற்சி செய்து வந்தனர். அப்போது மூன்றாம் வகுப்பு மாணவியான ரக்.ஷிதா (8) என்பவர், நடன ஒத்திகையில் பங்கேற்று ஆடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
ரக்.ஷிதா, அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கூலித் தொழிலாளி மாதேஸ்வரன் – தனலட்சுமி தம்பதியின் மகள் ஆவார். பள்ளியில் வழக்கம்போல் சுறுசுறுப்பாக படித்து வந்த அவர், ஆண்டு விழாவில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க உற்சாகமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒத்திகை நடைபெற்று கொண்டிருந்த போது, மாணவி ரக்.ஷிதாவின் நெற்றியில் விஷப் பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. கடித்த சில நொடிகளிலேயே மாணவி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அருகிலிருந்தவர்கள் உதவியுடன் திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும், அனைத்து முயற்சிகளையும் மீறி, மாணவி இன்று (பிப்ரவரி 9) பிற்பகல் 2 மணி அளவில் உயிரிழந்தார். இந்த செய்தி வெளியானதும், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் துயரத்தில் ஆழ்ந்தனர். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் பலரும் மருத்துவமனைக்கு திரண்டு வந்து ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் சம்பவ நேரத்தில் பணியில் இருந்த ஆசிரியர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி வளாகத்தில் விஷப் பூச்சி தாக்குதல் எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்தில் மாணவியின் உயிரிழப்பு சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதுடன், பள்ளி பாதுகாப்பு குறித்து பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.