
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மொபைல் போன்களை உள்ளே கொண்டு செல்லும் தடை இன்று, செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோயில்களின் புனிதத்தன்மை மற்றும் ஆன்மிகச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில்களுக்குள் புகைப்படம், வீடியோ, selfie மற்றும் reels எடுப்பது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து இந்த கட்டுப்பாடு கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
பக்தர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க, கோயில்களின் நுழைவாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையங்களுக்கு அருகே mobile phone locker / பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில கோயில்களில் இதற்காக கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 52 கோயில்களின் பட்டியலில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் இடம்பெற்றுள்ளன.
கோயில் விதிகளை மீறி செல்போன் பயன்படுத்துவது அல்லது புகைப்படம், வீடியோ பதிவு செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் இன்று முதல் இந்த முக்கிய கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள், உள்ளே நுழைவதற்கு முன்பே தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டியுள்ளது.