தமிழ் மொழியின் வளத்தையும், அறிவு பாரம்பரியத்தையும் பாதுகாத்து வளர்க்கும் நோக்கில், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுத் திட்டத்திற்காக 2025-ம் ஆண்டு வெளியான நூல்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம்” தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2025 ஜனவரி 1 முதல் 2025 டிசம்பர் 31 வரை தமிழில் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட நூல்கள் பரிசு தேர்விற்காக பரிசீலிக்கப்பட உள்ளன. இலக்கியம், அறிவியல், கல்வி, வரலாறு, கலை, மொழியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிவந்த தமிழ் நூல்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
மரபுக்கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், திறனாய்வு, மொழியியல், இலக்கணம், தமிழாக்க நூல்கள், இசை, ஓவியம், நடனம், சிற்பம், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தொல்லியல், அகழாய்வு, கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், தொழில்நுட்பவியல், சமூகவியல், பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல், மருத்துவம், கல்வியியல், உளவியல், வேளாண்மை, சுற்றுச்சூழல், கணினியியல், நாட்டுப்புறவியல், இதழியல், தகவல் தொடர்பு, விளையாட்டு, மகளிர் இலக்கியம் மற்றும் தமிழர் வாழ்வியல் உள்ளிட்ட 33 வகைப்பாடுகளின் கீழ் நூல்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியருக்கு ரூ.50,000 பரிசுத் தொகையும், அந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூ.25,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும். அதனுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கவுரவிக்கப்படும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31 ஆகஸ்ட் 2026-க்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியம், அறிவியல் மற்றும் பல்துறை அறிவு வளர்ச்சிக்கு பங்களித்து வரும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு இந்த திட்டம் சிறந்த அங்கீகாரமாக அமையும் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு 044-28190412 மற்றும் 044-28190413 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.