தவெக ஆட்சியில் குழப்பம்: “தமிழகத்திற்கு உண்மையில் யார் தான் முதலமைச்சர்?” – நயினார் நாகேந்திரன் விளாசல்!
சென்னை: தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளையும் முதலமைச்சர் விஜய்யின் மௌனத்தையும் கடுமையாகச் சாடி பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆன்மீக வழிபாட்டு உரிமைகளில் தவெக அமைச்சர்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதைக் குறிப்பிட்டு, இந்த ஆட்சியில் உண்மையான அதிகாரம் யாரிடம் உள்ளது என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரமும் தவெக அமைச்சர்களின் போக்கும்
நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், உலகப் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையை முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
“உயர்நீதிமன்றமே உத்தரவிட்டாலும் கூட, திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற விடமாட்டோம் என அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தவெக அமைச்சருமான சி.டி.ஆர்.நிர்மல்குமார் முஷ்டியை மடக்குகிறார். மற்றொரு புறம், தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பது தான் தங்களின் தற்போதைய அரசின் நிலைப்பாடு என தவெகவின் மற்றொரு முக்கிய அமைச்சரான ஆதவ் அர்ஜுனா அதற்கு முட்டுக் கொடுக்கிறார்.”
இத்தகைய போக்குகளைச் சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், “பொம்மை, பொம்மை, பொம்மை பார்! ஜோசப் விஜய் எனும் முதலமைச்சர் பொம்மை பார்!” என மிகக் கடுமையான வார்த்தைகளால் அரசைச் சாடியுள்ளார். முருகப் பக்தர்களுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் வாலும் காலும் இப்படிச் சலங்கைக் கட்டி ஆடிக் கொண்டிருக்க, கட்சியின் தலைமை என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் விஜய் இதுகுறித்து இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசாமல் மௌனம் காப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்புக்கு அவமதிப்பா? நயினார் நாகேந்திரன் வினா
உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பைக் கூட மதிக்காமல், ஒரு குறிப்பிட்ட சாராருக்குச் சாதகமாகவும், இந்து சமய மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் வாய் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதனை முதலமைச்சர் விஜய் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அமைச்சர்களின் இத்தகைய சட்ட விரோதப் போக்கினை வேடிக்கை பார்ப்பதற்காகவா தமிழக மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்கள் என்று நயினார் நாகேந்திரன் ஆவேசமாக வினவியுள்ளார்.
தவெக ஒரு “துரோக சக்தி” எனச் சாடல்
தேர்தலுக்கு முன்பு இந்து சமய வழிபாடுகள் குறித்தும், ஆன்மீகம் குறித்தும் எவ்விதக் கருத்தும் கூறாமல் அமைதி காத்துவிட்டு, தற்போது ஆட்சியமைத்தவுடன் முருகப் பக்தர்களின் அடிப்படை வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராகப் போர்க்கொடி பிடிப்பது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மதநல்லிணக்க அரசியலா என்று அவர் கேட்டுள்ளார்.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக ஒட்டுமொத்த இந்துக்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்யலாம் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதே கீழ்த்தரமான எண்ணத்தைத் தான் தற்போதைய தவெக அரசும் பிரதிபலிக்கிறது. இதன் மூலம், தங்களை ஒரு தூய அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழக வெற்றிக் கழகம், உண்மையில் தூய சக்தி அல்ல; அது ஒரு “துரோக சக்தி” என்று நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் மிகத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.