தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அளித்த பதிலுரையை கடுமையாக விமர்சித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அது மக்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கும் உரையாக இல்லாமல், “புளித்துப்போன சினிமா வசனங்களின் தொகுப்பாக” அமைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் எதிர்பார்த்த முக்கிய பிரச்சினைகளுக்கு தெளிவான பதில்கள் இல்லாமல், ஆவேசம், நக்கல், நையாண்டி கலந்த அரசியல் உரையாகவே முதலமைச்சரின் பதிலுரை அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன் தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பயிர்க்கடன் பிரச்சினைக்கு தீர்வு அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடும் விவசாயிகளை எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் போராடுவதாக கூறுவது விவசாயிகளை அவமதிக்கும் செயலாகும் என தினகரன் விமர்சித்துள்ளார்.
மேலும், ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பு தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்ததற்கு முந்தைய அரசின் அலட்சியமே காரணம் என்று கூறியிருந்த விஜய், தற்போது ஆட்சியில் 40 நாட்கள் நிறைவடைந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பில் என்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்றபின் போதைப்பொருள் தடுப்புப் படையை உருவாக்கியதாக அறிவித்த நிலையில், அந்த அமைப்பு தற்போது செயல்படுகிறதா என்ற சந்தேகத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், அதை சாதனையாக கூறுவது தேர்தல் வாக்குறுதியை மறைக்கும் முயற்சி என்றும் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல், கூட்டணி ஆட்சி என்ற பெயரில் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மாற்றம் ஏற்படுத்தியதாக முதலமைச்சர் கூறியிருப்பதையும் அவர் விமர்சித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு உருவான கூட்டணியின் மூலம் அல்லாமல், பின்னர் ஆதரவு மாறிய உறுப்பினர்களின் உதவியுடன் ஆட்சி அமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில சட்டமன்ற உறுப்பினர்களை அரசியல் ஆதாயத்திற்காக தங்களது அணியில் இணைத்துக் கொண்டதாகவும், இது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பாகவும் தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தினசரி நடைபெறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கைகள் தேவைப்படும் சூழலில், தொடர்ந்து கால அவகாசம் கேட்பது பொறுப்பைத் தவிர்க்கும் செயலாகவே தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
“தவெகவினருக்கு ஊழல் செய்யவும், லஞ்சம் வாங்கவும் தெரியாது” என்ற முதலமைச்சரின் கருத்தை சுட்டிக்காட்டிய அவர், சில தவெக நிர்வாகிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
அரசு அலுவலகங்களில் அத்துமீறி நுழைதல், அரசு பள்ளிகளில் அரசியல் விளம்பர நடவடிக்கைகள், சாலையோர வியாபாரிகளிடம் மாமூல் வசூல், பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட சம்பவங்களை குறிப்பிட்டு, கட்சியினரை கட்டுப்படுத்தத் தவறிய அரசு சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியது என்று கூறியுள்ளார்.
மேலும், கடந்த 40 நாட்களில் ஆட்சியின் செயல்பாடுகள் சிலருக்கு பதவிகள் வழங்குவது, கட்சியினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தத் தவறுவது மற்றும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அரசியல் நகர்வுகளில் கவனம் செலுத்துவது போன்றவற்றிலேயே அதிகமாக இருந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இறுதியாக, கடந்த கால அரசுகளை தொடர்ந்து குற்றம் சாட்டுவதற்கு பதிலாக, தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவும், மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தை முன்னெடுக்கவும் தமிழக அரசும் முதலமைச்சர் விஜய்யும் கவனம் செலுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.