தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோவையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது. கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்தார். அப்போது அவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் மஞ்சள் நிற துண்டு அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, கட்சி அடையாளம், சின்னம் அல்லது பிரச்சாரத்தை நினைவூட்டும் வகையிலான ஆடைகள் மற்றும் அடையாளங்களுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதால் அதிகாரிகள் தற்காலிகமாக அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி மஞ்சள் துண்டை அகற்றிய பின்னரே அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதித்தனர். அவரது ஆதரவாளர்களும் அதேபோல் விதிமுறைகளை பின்பற்றிய பிறகே மையத்திற்குள் செல்ல அனுமதி பெற்றனர்.

இந்த சம்பவம் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சூழ்நிலை சுமூகமாகி வாக்கு எண்ணிக்கை பணிகள் வழக்கம்போல் தொடர்ந்தன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு மற்றும் தேர்தல் ஒழுங்குமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால், எந்தவித அரசியல் அடையாளங்களும் அனுமதிக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் மீண்டும் தெரிவித்துள்ளனர்.