சென்னை:

தமிழகத்தில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக, மாநில அளவிலான சட்டமன்றத் தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைமையகம் அறிவித்துள்ளது.

பாஜக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியான (என்டிஏ) பாஜக தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் வகையில் கட்சியின் அனைத்து நிலை தலைவர்களும், தொண்டர்களும் முழு உழைப்புடன் களத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், “தேர்தல் பணிகள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற வேண்டும் என்பதற்காக, கடந்த தேர்தல்களின் அனுபவத்தைப் பொருத்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்படுகிறது” எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், அமைப்பாளராக பொன். இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணையாக, எஸ்.ஆர். சேகர், ஆர்.என். ஜெயப்பிரகாஷ், மா. வெங்கடேசன், மாலா செல்வகுமார் மற்றும் எஸ்.ஆர். ராமப்பிரியன் ஆகியோர் இணை அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மேலாண்மைக் குழுவின் முக்கியப் பணி மாநிலம் முழுவதும் தேர்தல் தளவாடங்கள், பிரச்சார வேலைத்திட்டங்கள், கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமான பணிகள், வேட்பாளர் ஒருங்கிணைப்பு, வாக்காளர் வலய அமைப்பு உள்ளிட்டவற்றை திட்டமிட்ட முறையில் மேற்கொள்வதாகும்.

பாஜக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, “இந்தக் குழு, மாநில தேர்தல் பிரச்சாரத்தின் முதன்மை இயக்க மையமாக செயல்படும். நயினார் நாகேந்திரனின் அனுபவமும், கடந்த தேர்தல்களில் பெற்ற நம்பிக்கையும் இந்தக் குழுவின் வலிமையாக இருக்கும்,” என கூறப்படுகிறது.

அதேபோல், இந்த மேலாண்மைக் குழுவின் கீழ் மாவட்ட, தொகுதி, மற்றும் பிரிவு அளவிலான துணைக் குழுக்கள் பின்னர் அமைக்கப்படவுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தனது அமைப்பு வலிமையை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கான ஆரம்ப சிக்னலாக இது பார்க்கப்படுகிறது.

இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய உற்சாகம் உருவாகியுள்ளது.