வாக்குப்பதிவு நிறைவு... தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் கடுமையான கண்காணிப்பில் இருந்த தமிழகம், தற்போது இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு திரண்டனர். இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகமாக பங்கேற்றனர். இதன் விளைவாக தமிழகத்தில் வரலாற்று சாதனையாக 85.15% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு மாநிலம் முழுவதும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வாகன சோதனைகள், பணம் மற்றும் பரிசுப்பொருள் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. பல இடங்களில் ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்கு விபரங்களை தேர்தல் பார்வையாளர்கள் சரிபார்க்க உள்ளனர். எங்கு முறைகேடு அல்லது குளறுபடி கண்டறியப்பட்டாலும், அந்த பூத்தில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு அவசியம் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போது அனைவரின் கவனமும் மே 4ஆம் தேதி வெளியாக உள்ள தேர்தல் முடிவுகள் மீது திரும்பியுள்ளது.