தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருகிற மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், அதிகாரிகள் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தூத்துக்குடி வளாகத்தில் உள்ள வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு தொகுதி வாரியாக மேசைகள், இருக்கைகள், அதிகாரிகள் அமரும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

ஆய்வின் போது வாக்கு எண்ணும் அறைகளில் செய்யப்பட்ட வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கான தனி வழித்தடங்கள், வேட்பாளர் முகவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தடையற்ற மின்சாரம், இணைய வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கலெக்டர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏற்கனவே 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை சீராக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின் இறுதியில், மீதமுள்ள பணிகளை திட்டமிட்டபடி விரைந்து முடிக்க கலெக்டர் விஷு மகாஜன் உத்தரவிட்டார். தேர்தல் முடிவை எதிர்நோக்கும் சூழலில் தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை மையம் பலத்த பாதுகாப்புடன் தயார் நிலையில் உள்ளது.