தவெக பனையூர் அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படுவதால் மற்ற கட்சிகள் ஆதரவு இல்லாமல் தவெக திணறுகிறது.

நேற்று மாலை தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு கோரி கடிதம் அளித்தார். ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் தவெக முகாமை பதற்றத்தில் உள்ளது.
தற்போது தவெக நிர்வாகிகள் அருண்ராஜ், சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் பனையூர் அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பனையூர் அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர். மூன்று மணி நேரத்திற்கு மேல் சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.
தவெகவுக்கு கிடைத்த 108 இடங்களுடன் காங்கிரஸ் ஆதரவு 113 ஆக உள்ளது. மீதமுள்ள ஐந்து ஆதரவுகளுக்காக சிறு கட்சிகளை அணுகி வருகிறது. ஆளுநரின் அழைப்பு இல்லாமல் சூழல் சிக்கலானது. பனையூர் கூட்டத்தில் அடுத்த நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும்.
தமிழக அரசியல் சூழல் நிலையற்றதாக உள்ளது. தவெக ஆட்சி அமைக்க முடியுமா என்பது கூட்டத்தின் முடிவைப் பொறுத்தது. விஜய் தலைமையில் கூட்டணி உருவாக்குவது, சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது ஆகியவை விவாதிக்கப்படுகின்றன.