சென்னை
தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இன்று பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சராக விஜயும், அவருடன் 9 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ டிகே பிரபுவுக்கும் இடம் கிடைத்துள்ளது. பல் மருத்துவர் பிரபு எப்படி அரசியலுக்கு வந்தார், காரைக்குடி தொகுதி வெற்றியில் என்ன செய்தார், இனி என்ன செய்ய விரும்புகிறார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

டிகே பிரபு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சேர்ந்தவர். பல் மருத்துவராக உயர் கல்வி பெற்று மருத்துவத்துறையில் ஆர்வம் கொண்டவர். அரசியலிலும் ஆர்வம் இருந்த பிரபு, விஜய் தொடங்கிய தவெக கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு தொடர்ந்து சமூகப் பணிகள், மருத்துவ அக்கறை நிகழ்வுகள் மூலம் மக்களிடையே பெயர் பெற்றார். அவரது தந்தை பல் மருத்துவரும் காரைக்குடியில் மக்கள் நலத்துக்காக பணியாற்றியவர்; இது குடும்பத்தின் நற்பெயரை மேலும் உயர்த்தியது.
விஜய் நடத்திய மாநாடுகள், மக்கள் கூட்டங்களில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு, முதலுதவி, மருத்துவ சிகிச்சை வசதிகளை பிரபுவே கவனித்து வந்தார். இது அவருக்கு மக்கள் மத்தியில் “மருத்துவர் பிரபு” என்ற பெயரை சம்பாதித்தது. இடையில் இன்ஸ்டாகிராமில் அதிக ரீல்ஸ் போட்டதால் “ரீல்ஸ் டாக்டர்” என கலாய்க்கப்பட்டாலும், அதே நேரத்தில் அவரது சமூக பணிகள் பெரிதும் பேசப்பட்டது.
தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பிரபு, காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ மாங்குடி மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை எதிர்த்துக் களத்தில் வெற்றி பெற்றார். சுமார் 46,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை இவரது அரசியல் செல்வாக்கின் சக்தியை வெளிப்படுத்துகிறது. சீமானை டெபாசிட் இழக்க வைத்தது மட்டுமின்றி, காங்கிரஸ் தரப்புக்கும் பெரும் தொந்தரவை ஏற்படுத்தியது.
படித்த, பண்பான, தொடர்பு கொள்ள எளிதான தோற்றம் கொண்டவராக பிரபு அறியப்படுகிறார். எதிர்க்கட்சிகளை தேவையற்ற வார்த்தைகளில் திட்டாமல், தொகுதி மக்களின் பிரச்சினைகளை தெளிவாகச் சொல்லி வாக்கு கோரினார் என பகுதி மக்கள் கூறுகின்றனர். விஜய் அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது என்பது, இளைஞர் தலைவர்களை உயர் பொறுப்புகளில் அமர்த்தும் அணுகுமுறையை உணர்த்துகிறது. காரைக்குடி தொகுதி மக்களின் கல்வி, மருத்துவம், சாலை, உட்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதே தனது முதல் முன்னுரிமை என பிரபு கூறியுள்ளார். அதை நிரூபிக்கும் வகையில் அமைச்சராக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.